பிரம்மா இங்கு யாகம் செய்ததால் இத்தலத்திற்கு 'காஞ்சி' (க-அஞ்சிதம் - பிரம்மாவினால் பூஜிக்கப்பட்டது) என்ற பெயர் ஏற்பட்டது என்றும், அவர் செய்த யாகத்துக்கு உகந்து பெருமாள் வரம் தந்ததால் 'வரதராஜன்' என்று அழைக்கப்படுவதாகவும் தல வரலாறு கூறுகிறது. அத்திகிரி என்னும் சிறு குன்றின் மீது 'அத்திகிரி' என்றும் வழங்கப்படுகிறது.
மூலவர் வரதராஜன், பேரருளாளன் என்ற திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்பது திருநாமம். பிரம்மா, ஆதிசேஷன், நாரதர், பிருகு முனிவர், கஜேந்திரன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
கோயிலில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தினாலான அத்திவரதரை வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்கள் ஸேவைக்கு வைக்கப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியாலான பல்லிகளை பக்தர்கள் தொட்டு வணங்கினால் பல்லியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி விடுவதாக ஐதீகம்.
முக்தி தரும் ஏழு நகரங்களுள் இதுவும் ஒன்று. ஹரித்துவார், வாரணாசி, அயோத்தி, துவாரகை, மதுரா, உஜ்ஜயினி ஆகியவை மற்ற ஆறு நகரங்கள்.
பொய்கையாழ்வார், ஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதார ஸ்தலம். ஆளவந்தார், திருக்கச்சி நம்பி, ஸ்ரீராமானுஜர், ஆழ்வான், ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 4 பாசுரங்களும், பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 7 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|